முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று இரவு அவர் தாய்லாந்தில் இருந்து இலங்கை புறப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
மக்கள் போராட்டங்களை தொடர்ந்து, ஜுலை 13 ஆம் திகதி மாலைதீவு ஊடாக சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, சிலவாரங்களின் பின்னர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றார்.
இந்நிலையில் இலங்கையில் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு செல்ல எதிர்பார்ப்பதால், அதற்கான அனுமதியை வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி குறிப்பிட்ட காலம் வரையில் பஸில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.