
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் அத்துடன் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பகுதி மற்றும் கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை பகுதி, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்காக முன்கூட்டியே நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நீர் பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.