
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 44 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, வாழைத்தோட்டம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 29 பேர் நெடுந்தூர மீன்பிடிப் படகொன்றுக்குள் இருந்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஐவர் குறித்த மீன்பிடிப் படகில் இருந்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மற்றுமொரு மீன்பிடிப் படகொன்றில் இருந்து மேலும் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இவர்களிடையே சிறுவர்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.