file photo: FMM Sri Lanka
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பாக இருந்தாலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்திற்கும் நீதி வழங்கப்படாத வரலாறே காணப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கமே தற்போதும் ஆட்சியில் இருப்பதாக அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற கேள்வி நீதிக்காக குரல் எழுப்பும் ஊடக சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க முழு அளவிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.