November 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை திருப்பிக் கேட்கும் ஜப்பான்!

வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக நன்கொடையாக வழங்கப்பட்ட நிதித் தொகையொன்றை மீள ஒப்படைக்குமாறு ஜப்பான் தூதரகம், யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கோரியுள்ளது

2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஒரு கோடியே 43 இலட்சத்து 29,446 ரூபா நிதி ஜப்பானினால் வழங்கப்பட்டது.

ஆனால் அது தொடர்பான வேலைத்திட்டங்கள் மூன்று வருடங்களாகியும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தம்மால் முன்மொழியப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் கடிதமொன்றை அனுப்பி யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதியை உள்ளூராட்சி மன்றங்களால் நேரடியாக பயன்படுத்த முடியாது என்ற காரணத்தை குறிப்பிட்டு, ஜப்பான் வழங்கிய நிதியை பயன்படுத்துவதற்கு இலங்கை நிதியமைச்சு தடை விதித்ததாலேயே குறித்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.