Photo: Facebook/RamjanRamanayake
சிறையில் இருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகி வெளியே வந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவை தமது பக்கத்திற்கு இழுந்தெடுப்பதற்காக ரணில் அணியினரும், சஜித் அணியினரும் கடும் போட்டிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்க தமது கட்சியின் உறுப்பினராக இருந்தமையினால் அவர் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரை தங்கள் பக்கத்தில் வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் அவரை தேசியப் பட்யல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்க முடியுமா? என்று ஆராய்ந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர், இப்போதைக்கு தமது அணியில் முக்கிய பதவிகளை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பதாகவும், அவருக்கு பாராளுமன்றக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும், நிறைவேற்றுக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊழல் ஒழிப்புக் குழுவில் அவருக்கு பதவியொன்றை வழங்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
எனினும் ரஞ்சன் ராமநாயக்க நிபந்தனைகளுடனேயே ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்படி அரசியல் செய்யும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ வழங்கப்படவில்லை.
இதேவளை ரஞ்சன் ராமநாயக்கவை தமது பக்கத்தில் வைத்துக்கொள்வதற்காக ரணில் அணியை சேர்ந்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனமொன்றில் முக்கியப் பதவியொன்றை வழங்கி அவரை தமது பக்கத்திற்கு இழுத்தெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாட்டு பணியாளர்கள்கள் தொடர்பான நலன்புரி விடயங்களுக்கான தூதுவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரஞ்சன் ராமநாயக்க பதவிகளை எடுப்பது தொடர்பில் இதுவரையில் தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.