முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஆதரிப்பர் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, செப்டம்பர் மாதத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன்படி அவர் நாடு திரும்பிய பின்னர், அவர் விரும்பினால் அவரை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுத்தால் அதனை ஆதரிப்பீர்களா? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மதுர விதானகே எம்.பி, அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை வெகு விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதேபோன்று 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியொருவர் பிரதமராக பதவியேற்பதை எவரும் எதிர்க்கப் போவதில்லை என்றும் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.