எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டின் பாதுகாப்பு படையினர் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக வர்ணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக கொடி வர்ணங்களுக்கு சர்வமத ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்தினார்.
”இராணுவத்தை ஒழுக்கத்தால் மட்டும் வழிநடத்த முடியாது. ஒழுக்கத்துடன் பயிற்சியும் தேவை. அதேபோன்று ஒழுக்கமும் பயிற்சியும் பெற்றாலும் வெற்றியடைய முடியாது. அந்த இராணுவத்திற்கு அறிவு இருக்க வேண்டும். இராணுவ அறிவு மற்றும் பிரதேச அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவுடன் வெற்றி கிடைக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.