January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சனின் விடுதலை எப்போது?: ஹரின் வெளியிட்ட தகவல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ஜுலை 26 அல்லது 29 ஆம் திகதி விடுதலையாவார் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ஹரின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க 26 அல்லது 29 ஆம் திகதிகளில் விடுதலையாவார் என்று நம்புவதாகவும், இவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கும், இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்வதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது தண்டனைக்கு காரணமான நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் வெளியிட்டிருந்த கருத்துக்கு சத்தியக் கடதாசி மூலம் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பான முதலாவது மற்றும் இரண்டாவது வழக்குடன் தொடர்புடைய தனக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்தே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது கருத்து தவறானது என்றும், இதனால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையில் அனைவருக்கும் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் தனது சத்தியக் கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.