File Photo
இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்காது இருப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பின்னர் அவசரகால சட்டம் தானாகவே செயலிழக்கவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து நாட்டில் அமைதி நிலைமையை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜுலை 17 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதற்கு 14 நாட்களுக்குள் இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால் கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இதனை நீடிக்க வேண்டுமாயின் எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் பாராளுமன்றத்தில் அது தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த சட்டத்தை நீடிக்க ஜனாதிபதி எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் தானாகவே தற்போது அமுலில் உள்ள அவசரகால சட்டம் செயலிழக்கவுள்ளது.