January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுதந்திர தினத்தில் மீண்டும் தமிழிலும் தேசிய கீதம்!

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் போது மீண்டும் தமிழிலும் தேசிய கீதத்தை பாடுவதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்த வருடத்தில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது தமிழிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யோசனை முன்வைத்துள்ளார்.

நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதியின் நல்லெண்ண வெளிப்பாடாக சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இவ்வேளையில் அமைச்சர்கள் அந்த யோசனையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் சிங்கம் மற்றும் தமிழ் மொழிகள் அரச கரும மொழியாக உள்ள நிலையில், இந்த இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடுவதில் எந்தப் பிரச்சனையும் கிடையாது என்று, இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.