எரிபொருள் லீட்டர் ஒன்றை 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என்று கோப் குழுவின் முன்னிலையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோப் குழுவினால் விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கமையவே கணக்காய்வாளர் அலுவலகம் இந்த விசாரணையை முன்னெடுக்கின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற கோப் குழுவிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அழைக்கப்பட்டிருந்த போது, அனைத்து வரிகளுடன் ஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவிற்கு விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவரின் கருத்தை எரிசக்தி அமைச்சு நிராகரித்திருந்தது.
இவ்வாறான நிலைமையிலேயே இது தொடர்பில் விசாரணை நடத்தி ஆராயுமாறு கணக்காய்வாளர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.