இலங்கையில் புலம்பெயர் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
விசேட அறிக்கையோன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது.
இதன்படி, 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.
உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை (ATC), தமிழீழ மக்கள் பேரவை (TEPA) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்த தனிநபர்கள் சிலர் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் புலம்பெயர் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் அவற்றில் பல அமைப்புகளின் தடையை நீக்க நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மீண்டும் குறித்த அமைப்புகள் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலைமையில் மீண்டும் சில அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.