சர்ச்சைக்குரிய அதி தொழில்நுட்ப வசதிகளுடனான சீன ஆய்வுக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அந்தக் கப்பல் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிற்கும் காலப்பகுதியில் எவ்வித ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு சீனா அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
இதனால் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையை வந்தடையவிருந்த கப்பல் வருகையை தாமதப்படுத்தி 16 ஆம் திகதி வந்தடையவுள்ளது.