November 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்க் கட்சிகள் கடிதம்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி,  வடக்குக் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் இந்தத் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் உள்ள சரத்துக்களுக்கு மேலதிகமாக சில முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பரில் நடைபெறவுள்ள நிலையிலேயே இவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

இதேவேளை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறித்தக் அந்தக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளனர்.