பாகிஸ்தான் கடற்படையின் ‘பிஎன்எஸ் தைமூர்’ (PNS TAIMUR) யுத்தக் கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.
துறைமுகத்தை வந்தடைந்ததும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வ அணிவகுப்புடன் கப்பலை வரவேற்றனர்.
குறித்தக் கப்பல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரையில் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ள ‘பிஎன்எஸ் தைமூர்’ போர்க் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளமை தொடர்பில் இந்தியா விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்தக் கப்பலை முதலில் பங்களாதேஷ் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கு அந்நாட்டு அரசாங்கம் மறுப்பு தெரிவித்தை தொடர்ந்தே அது கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.