January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியிடம் அனுரகுமார விடுத்த வேண்டுகோள்!

விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட, மக்களின் எதிர்ப்புக்கு உள்ளான ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கமே தற்போது உள்ளது என்றும், சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் அதில் பங்காளிகளாக முடியாது என்று அனுரகுமார திஸாநாயக்க அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடலில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கலந்துகொள்ளாமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் நலனுக்காக தற்போதைய நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் அந்தக் கட்சியினர் இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.