சிங்கபூரில் தற்போது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீசாக் காலம் முடிவடையும் நிலையில், அவர் அங்கிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபயவுக்கு 90 நாட்களுக்கு தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளன.
தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் முன்னாள் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், அவர் தாய்லாந்தில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து மாலைதீவு ஊடாக ஜுலை 14 ஆம் திகதி கோட்டாபய சிங்கபூர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டார்.
சாதாரண சுற்றுலா வீசாவிலேயே அவர் சிங்கபூர் வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் 14 நாட்கள் அவருக்கு வீசா வழங்கப்பட்டது, பின்னர் மேலும் 14 நாட்களுக்கு வீசா காலம் நீடிக்கப்பட்டது.
இதன்படி ஆகஸ்ட் 11ஆம் திகதி வரையிலுமே அங்கு தங்கியிருக்க முடியும். இதனால் அடுத்ததாக தாய்லாந்து செல்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இதன் பின்னர் அவர் அமெரிக்கா அல்லது துபாய் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.