சிங்கபூரில் தற்போது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி அவர் தாய்லாந்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தனக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து மாலைதீவு ஊடாக ஜுலை 14 ஆம் திகதி கோட்டாபய சிங்கபூர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டார்.
சாதாரண சுற்றுலா வீசாவிலேயே அவர் சிங்கபூர் வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் 14 நாட்கள் அவருக்கு வீசா வழங்கப்பட்டது, பின்னர் மேலும் 14 நாட்களுக்கு வீசா காலம் நீடிக்கப்பட்டது.
இதன்படி ஆகஸ்ட் 11ஆம் திகதி வரையிலுமே அங்கு தங்கியிருக்க முடியும். இதனால் அடுத்ததாக தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் அமெரிக்கா அல்லது துபாய் சென்று அங்கு சில காலம் தங்குவதற்கே எதிர்பார்த்துள்ளார். எனினும் அவருக்கு அந்த நாடுகள் வீசா வழங்குவதற்கு தாமதித்து வரும் நிலையிலேயே அவர் சிங்கபூரில் தங்கியிருக்கின்றார்.