ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்குமாறு வலியுறுத்தியும் இன்று கொழும்பில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஜுலை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இன்றைய தினத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி இன்று பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து பேரணிகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தில் அங்கம் வகிக்கும் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்கு எதிரான சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல ஆதரவளித்துள்ளன.
இதேவேளை இன்றைய போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய போதும், அதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் பொலிஸார் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியுமென்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.