சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பல் யுவான் வேங் – 5, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
குறித்த கப்பல் இலங்கை வரவுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்தக் கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று இந்திய அதிகரிகாரின் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இதன்போது அந்தக் கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், கப்பலுக்கு இலங்கையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பின்னர் செய்திகள் வெளியாகின. .
சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து ஜுலை 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 மற்றும் 17 ஆம் திகதிக்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலைமையில் அந்தக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இலங்கை வருகின்றது என்றும், இதனை தவிர வேறு எந்த நடவடிக்கைகளிலும் அந்தக் கப்பல் ஈடுபடாது என்றும் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
எனினும் தமது எதிர்ப்பையும் மீறி இலங்கை அந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கப்பலுக்கு அனுமதி வழங்க மறுத்தால் சீனாவில் உதவிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வரலாம் என்று கூறப்படுகின்றது. அதேபோன்று அனுமதி வழங்கினால் இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்தப் பிரச்சனையை இராஜதந்திர ரீதியில் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், அந்தக் கப்பலின் வருகையை தாமதப்படுத்த முடியுமா என்று சீன அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.