கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அங்குள்ள கூடாரங்கள், தற்காலிக நிர்மானங்கள் ஆகியவற்றை அகற்றுமாறும் பொலிஸாரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸார், குறித்தப் பிரதேசம் அரச மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்றும், அதற்குரிய காணியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகள் சட்டவிரோதமானவை என்றும் அறிவித்துள்ளனர்.
இதனால் அங்கிருந்து அவற்றை அகற்றுமாறும், நாட்டில் உள்ள சட்டங்களை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை அங்கிருந்த கூடாரங்களை போராட்டக் காரர்கள் அகற்றியுள்ளதுடன், இன்றைய தினத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், போராட்டத்தை வேறு எங்கிருந்தாவது முன்னெடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.