ஜனாதிபதி தெரிவுக்காக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் தனக்கு ஆதரவாக வாக்களித்தாக கூட்டமைப்பினர் முன்னிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ள நிலையில் இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சிறிதரன் எம்.பி, ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்திருந்ததாகவும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
இதன்போது பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் மௌனமாக இருந்ததாக சாணக்கியன் இராசமாணிக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.