January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இருளுக்கு சாபமிடாது ஒரு விளக்கையாவது ஏற்ற விரும்பினேன்”

நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காகவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதில் இணைந்துகொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று அரச கொள்கை விளக்க உரையை மேற்கொண்டு கூறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவதே எனது கடமையாகும் என்றும், இதனாலேயே தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நெருக்கடி நிலைமையில் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளை கூறிக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இன்று நாட்டில் எரிபொருள் நெருக்கடிகள் இருந்திருக்காது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நெருக்கடி நிலைமையில் இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது என்றும் இதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்.