Photo: Facebook/IUSF
கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து நேற்றைய தினம் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ருகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், காலிமுகத்திடல் போராட்டக் குழுவை சேர்ந்தவருமான வெரங்க புஷ்பிக எங்கே இருக்கின்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் கடத்தப்படவில்லை என்றும், கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை கோட்டை பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனை தொடர்ந்து இவர் கடத்தப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பில் அறிவித்துள்ள பொலிஸார், அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.