ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தின் போது, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தனிஸ் அலி ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனிஸ் அலி, நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, குழுவொன்று ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை முற்றுகையிட்டது.
இவ்வேளையில் தொலைகாட்சி ஒளிபரப்புகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தியதாக அந்தக் குழுவினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனிஸ் அலி துபாய் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்த போது அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதன்பின்னர் அவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற பிடியாணைக்கமைய கைது செய்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை தனிஸ் அலி கைது செய்யப்பட்ட முறை தொடர்பில் பல்வேறு சிவில் அமைப்புகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.