January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அமைதியான போராட்டங்கள் தடுக்கப்படவில்லை”

வன்முறையின்றி அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தும் உரிமையை உறுதி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் படையினரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து, கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கூறுகையிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21 ஆவது சரத்து மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் 14 (1) (பி) ஆகிய இரண்டையும் நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டு சொத்துக்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி சுட்டிகாட்டியுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் விகாரமஹாதேவி பூங்காவின் வெளி அரங்கம், புதிய நகர மண்டபம், ஹைட் பார்க், கெம்பல் பிட்டிய போன்ற அனைத்து வசதிகளும் அகிம்சை வழியிலான போராட்டங்களுக்காக வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

´கோட்ட கோ கம´ போராட்டக் களம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்றும், பாதுகாப்புப் படையினரால் அது அகற்றப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவது உட்பட பின்பற்ற வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபர் இராஜதந்திர அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.