January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19 : மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்குத் தடை!

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்வதற்கு கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று மாலை கூடிய ஜனாதிபதி செயலணியில் நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கிய தீர்மானமாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வழமையாக ஊரடங்கு அமுலில் இருக்கும் போது, முக்கிய தேவைகளுக்காக வெளியில் செல்வோருக்கு வழங்கப்படும் அனுமதியை இம்முறை யாருக்கும் வழங்க வேண்டாமென்று ஜனாதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வீடுகளில் தனிமைப்படுத்தப்படும்  நபர்களுக்கு பீசீஆர் பரிசோதனையை 10 ஆவது நாளில் செய்யவும், அதில் தொற்று இல்லையென்றால் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் அவரை இயல்பு வாழ்வுக்கு அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் மருத்துவமனைகள் அல்லது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொவிட்  தொற்று அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுடன், தேவைப்பட்டால் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.