ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு போகச் செய்யும் போராட்டம் தற்போது கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.
இதனால் கொழும்பில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரிமாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்றங்களின் ஊடாக தடையுத்தரவை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்ட போதும், நீதிமன்றங்கள் தடைக்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளன.
இவ்வாறான நிலைமையில் நேற்று இரவு முதல் கொழும்பு உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டன.
இந்த ஊரடங்கு உத்தரவு சட்டப்பூர்வமற்றது என்று சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூறி வந்த நிலையில், அந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், பஸ், லொறி என பல்வேறு வாகனங்களிலும் ஏறி பெருந்திரளான இளைஞர்கள் கொழும்பு நோக்கி வருகை தருகின்றனர்.
இதேவேளை நேற்று மாலை முதல் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் கொழும்பு கோட்டையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் தங்கியிருக்கின்றனர்.