பெட்ரோல் மற்றும் டீசலை 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியுமாக இருக்கும் போது அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக, கோப் குழுவில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்கான செலவுகள் தொடர்பான தரவுகளை ஆராயும்போது அவற்றை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு விற்பனை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் புதன்கிழமை கூடியபோதே ஜனக ரத்னாயக இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் கொள்வனவின் போது அவற்றின் இறக்குமதிக்கான செலவு மற்றும் அரசாங்கம் அறவிடும் வரித் தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை சரியான முறையில் ஆராயும்போது இது தொடர்பான விபரங்கள் தெரியவருவதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பெட்ரோல் மற்றும் டீசலை தற்போதைய விலையைவிட 200 ரூபா குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த முதலாம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் ஒரு லீட்டருக்கு 280 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய இந்தக் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது நாட்டின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்திவலு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை அழைத்து எதிர்காலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.