ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் கொழும்பில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 8, 9 ஆம் திகதிகளில் கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது இவர்கள் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர்கள், அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும், அங்குள்ள வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் அதனை நிராகரித்துள்ளார்.
எனினும் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளன என்றும் நீதவான் அறிவித்துள்ளார்.