தெற்கில் அல்லது வடக்கில் ஜுலை 5 அல்லது 6 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கரும்புலிகள் நினைவு தினத்தை இலக்காகக் கொண்டு வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பொன்றின் ஒத்துழைப்பில் இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இது குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும் குறித்தக் கடிதம் தொடர்பில் சந்தேகங்கள் காணப்படுவதாகவும், இதனால் அந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் கிடைத்த விதம் தொடர்பில் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக ஜேவிபியும் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் குழுக்களும் திட்டமிட்டு வருவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதற்கான தந்திரமாக இருக்கலாம் என்றும் அனுரகுமார அதன்போது தெரிவித்துள்ளார்.