நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலைமை மோசமடைந்துள்ள நிலைமையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் பாராளுமன்ற கூட்டங்களை நடத்துவதற்கு பாராமன்ற விவகாரக் குழு தீர்மானித்துள்ளது.
இதன்போது இன்றைய கூட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்ட 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக பதிலளிக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, 1979ஆம் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2270/59 ஆம் இலக்க மற்றும் 2280/32 இலக்க வர்த்தமானி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம், 2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 08ஆம் பிரிவின் கீழான கட்டளை என்பவற்றை விவாதத்தின் பின்னர் நிறைவேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை 6 ஆம் திகதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.