
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தின் சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த விமான நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் ஜுலை 1 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்று கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு, அந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொவிட் தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்த சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது அந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஜுலை 1 ஆம் திகதி தொடக்கம் அந்த சேவைகளை ஆரம்பிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக அந்த நடவடிக்கைகளை பிற்போட நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.