File Photo
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மாகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கையொப்பங்களுடன் இன்று மாலை இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வ கட்சி அரசாங்கத்தின் தலைவராக கட்சித் தலைவர்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய எவரையும் நியமிக்க முடியும் என்பதுடன், அவர் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவராக இருப்பது முக்கியமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் பொருத்தமான ஒருவரை தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யலாம் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சரவை 15 பேருக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அரச நிருவாகத்தை நடத்திச் செல்ல முடியாவிட்டால் அதனை பொருத்தமானவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.