January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிருணிகாவின் புகைப்படங்கள் குறித்து பிரதமர் விடுத்த வேண்டுகோள்!

ஹிருணிகா பிரேமசந்திர, தனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட அவரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமூக வலைத்தள பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது என்றும், தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மகளிர் அமைப்புகளை சேர்ந்தோர் நேற்று பிரதமருக்கு எதிராக அவரின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தவறான வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து கூறும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”அவர் அரசியல் போராட்டத்துக்காக வந்திருந்தார். அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஹிருணிகா பிரேமசந்திர, ”மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். (பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர். எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான்” என்று தெரிவித்துள்ளார்.