இந்திய கடன் திட்டத்தின் கீழ் இதுவரையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு கடன் பெற்றுள்ளோம் என்றும், மேலும் அவர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம் நமக்கும் இருக்க வேண்டும் என்றும், இவை நன்கொடைகள் அல்ல என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ளது. இதன் விளைவாக, உலகில் எந்த நாடும் அல்லது அமைப்பும் எங்களுக்கு எரிபொருளை வழங்க தயாராக இல்லை. காசுக்கு எரிபொருளைக் கொடுக்கக்கூட தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனை கூறியுள்ளார்.
இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, நாடு எதிர்நோக்கும் உண்மையான நிலைமை மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதை சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
நாடு எதிர்கொள்ளும் கஷ்டங்களை எங்களிடம் கூறுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டாரா?” என்று என்னை விமர்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், நாங்கள் அவர்களிடம் முழு உண்மையையும் கூறுகிறோம் என்பதற்காக இன்னும் பலர் நன்றியுள்ளவர்களாக உள்ளனர், மேலும் இந்த சிக்கல்களை சமாளிக்க எங்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை முன்வைக்க அவர்கள் முன்வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். நமது பொருளாதாரம் முழுமையான சரிவைச் சந்தித்துள்ளது. அதுதான் இன்று நம் முன் உள்ள மிகத் தீவிரமான பிரச்சினை. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இப்போது எம்முன் உள்ள ஒரே பாதுகாப்பான தெரிவாகும். இதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கி, நமது ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வருடத்திற்காக ஆகஸ்ட் மாதமளவில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.