பாராளுமன்ற கூட்டங்களால் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் பாராளுமன்ற கூட்டங்களை நிறுத்தி அதற்கான செலவை பசியில் வாடும் தோட்டப் பகுதி மக்களுக்கு வழங்குங்கள் என்று சபையில் கோரிக்கை விடுத்தார்.
ஒருவார காலத்திற்கு பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பதற்கு எதிர்க்கட்சியினர் தீர்மானித்ததை தொடர்ந்து சபையில் அது தொடர்பில் தனது கருத்தை பதிவு செய்தே வடிவேல் சுரேஷ் இதனை கூறியுள்ளார்.
”200 வருடங்களாக நாட்டுக்கு டொலரை கொண்டு வந்த, சிலோன் டீ என்ற பெயருக்கு காரணமான தோட்டப்புற மக்கள் இன்று பசியில் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் பாராளுமன்ற கூட்டம் அவசியமற்றதே. இதற்கான செலவை அவர்களின் பசியை போக்க வழங்குங்கள்” என கூறியுள்ளார்.