January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் மாற்றம்!

இலங்கையில் இருந்து வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரின் குறைந்தபட்ச வயதை 21 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே ஒவ்வொரு நாட்டுக்கும் என்று குறைந்தபட்ச வயதெல்லை தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சவுதி அரேபியாவுக்கு செல்வோரின் வயதெல்லை 25 ஆகவும் , ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோரின் வயதெல்லை 23 ஆகவும் மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்வோரின் வயதெல்லை 21 ஆகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த குறைந்தப் பட்ச வயதெல்லையில் மாற்றம் கொண்டுவரும் வகையில் தொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வயதெல்லை தொடர்பில் தீர்மானம் எடுப்பது தொடர்பில் அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஜூன் 6ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

குறித்த உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கைப் பெண்களை வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்கான ஆகக்குறைந்த வயதை 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.