January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் ரணில் அவுஸ்திரேலிய அமைச்சருடன் கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ’நீலுடன் இன்று, கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்துவதாக பிரதமர் விளக்கினார்.

இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகவும், அதேவேளை அவுஸ்திரேலிய சுற்றுலாவை இலங்கைக்கு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக அமைச்சர் ஓ நீல் தெரிவித்தார்.

தனது அரசாங்கம் அதன் கப்பல் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யத் தயாராகி வருவதாக விளக்கிய அமைச்சர், கடல் பாதுகாப்பு மற்றும் மனித கடத்தல் தொடர்பான தனது நிர்வாகத்தின் கொள்கையை விளக்கினார்.

மனித கடத்தலை நிறுத்துவதை உறுதி செய்வதில் இலங்கை அரசும் அதன் பாதுகாப்புப் படையினரும் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.

சுங்கத் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கும் மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பையும் உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவி வழங்கியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.