January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவியேற்க மாட்டேன்”

பாராளுமன்ற உறுப்பினராக தான் பதவியேற்பதனை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் தான் எம்.பியாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க மாட்டேன் என்று வர்த்தகர் தம்மிக்க பெரேரா உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் இராஜினாமவை தொடர்ந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதாக அந்தக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது.

எனினும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட சில தரப்பினரால் உயர் நிதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்பின் 99 ஏ பிரிவின் படி அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரையே தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யமுடியும் எனவும், ஒன்று அவர் தேர்தலில் போட்டியிட்டவராகவோ அல்லது ஏற்கனவே தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவராகவோ இருக்க வேண்டும் என்றும் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு தம்மிக்க பெரேரா இன்று தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்து, தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் பதவியேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.