November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு உதவ தென்கொரியா முன்வந்தது!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி யூன் சுக்-யெயோல் மற்றும் அவரது கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்துத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான 45 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இலங்கைக்கு தென்கொரிய அரசாங்கம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள், தற்போதைய நிலைமையில் இருந்து மீள தென்கொரிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்குமாறும், கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு தொழில்முயற்சியாளர்களை அழைக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.