இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை ஒன்லைன் முறையில் முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் இன்று முக்கிய கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை முடக்க வேண்டும் என்று சில தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும், அவ்வாறு முடக்குவதற்காக தீர்மானங்கள் எதனையும் எடுக்காது இருப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
இந்திய கடன் திட்டத்தின் இறுதி எரிபொருள் கப்பல் நேற்று இலங்கை வந்த நிலையில், அடுத்தக் கப்பல் எப்போது வருமென்ற அறிவித்தல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இதனால் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் நீண்டு செல்கின்றது.
இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் நாட்கள் இன்னும் நெருக்கடியாக அமையும் என்பதனால் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை நடத்திச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இதற்கு மாற்றுவழிகளை ஆராய்ந்து வரும் அரசாங்கம், ஒன்லைன் முறையில் அவற்றை நடத்திச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.