January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் அதானிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் மின் உற்பத்தி திட்டங்களை சிலவற்றை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோஷலிச கட்சியினால் பம்பலப்பிட்டி பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமம் ஆகியவற்றுக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறும், இந்தியப் பிரதமர் அழுத்தம் கொடுப்பதாகவும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த பெர்னாண்டினோ அண்மையில் கோப் குழு முன்னிலையில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலைமையிலேயே இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.