File Photo
யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையே பயணிகள் மற்றும் சரக்கு படகு சேவைகளையும், பலாலி – திருச்சி இடையே விமான சேவைகளையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையான அளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.