வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் 5 இலட்சம் ரூபா கப்பம் கோரி குழுவொன்றினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணாருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரியகுத்தூர் பகுதியில் வைத்து நேற்று காலையில் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாகவும், வீடொன்றில் பெண்ணை அடைத்து வைத்து சந்தேக நபர்கள் பெண்ணின் மகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கப்பம் கோரியுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பிட்ட கப்பத் தொகையை கொடுக்காவிட்டால் குறித்த பெண்ணை சுட்டுக் கொன்று விடுவோம் என சந்தேக நபர்கள் மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கிடைத்த தகவல்களின்படி சூட்சுமான முறையில் செயற்பட்ட பொலிஸார், பெண்ணின் மகள் கப்பத்தை வழங்குவதற்காக சந்தேக நபர்களை அழைப்பதை போன்று அழைத்து, அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பணம் கொடுக்கும் விதத்தில் சந்தேகநபர்கள் அழைக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.