மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழு முன்னிலையில் தான் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினான்டோ அறிவித்துள்ளார்.
மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையிலேயே, அவர் அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
கோப் என்று அழைக்கப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவினர் கேள்வியெழுப்பினர்.
இவ்வேளையில் பதிலளித்த இலங்கை மின்சார சபையின் தலைவர், கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியப் பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.
இந்நிலையில் மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் வெளியிட்ட கருத்தை நிராகரித்துள்ள ஜனாதிபதி அது தொடர்பில் டுவிட்டர் பதவியில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பான கோப் குழுவின் விசாரணையில் மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை மறுப்பதாகவும் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை அளிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில், தான் கோப் குழு முன்னிலையில் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், வேலைப்பளு காரணமாக உணவு கூட உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாகவும் கோப் குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.