இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தமது வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.
தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே ஜெனிவா செல்ல முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற சங்கத்திலும் முறையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 9 ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகளின் போது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டன.
இது தொடர்பில் தமக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்று கூறும் பாதிக்கப்பட்ட எம்.பிக்கள், குழுவாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறையிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.