November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜபக்‌ஷ குடும்பத்தில் இன்னுமொருவர் பதவி விலக முடிவு?

ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த இன்னுமொருவர் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பஸில் ராஜபக்‌ஷ எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அவரின் சகோதரர்களில் ஒருவர் அடுத்ததாக பதவி விலகவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அல்லது சமல் ராஜபக்‌ஷ ஆகியோரில் ஒருவரே இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு ராஜபக்‌ஷக்களே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்‌ஷக்களை அரசியலில் இருந்து ஒதுங்குமாறு பல்வேறு தரப்பினரும் அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதியை தவிர ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியதுடன், மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ஷ விலகினார்.

இதனை தொடர்ந்து ஜுன் 9 ஆம் திகதி பஸில் ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

இவ்வாறான நிலைமையில் இன்னுமொரு ராஜபக்‌ஷ எம்.பி பதவியை துறக்க தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.