ஆளும் கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தார்.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் அனுதாப பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதன்படி அவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர்.
இதன்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தக்காலத்தில் 30 வருடங்களாக மக்கள் மரண பயத்துடனேயே வீதிகளில் சென்றனர். 2019 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் அந்த அச்சம் இல்லாது செய்யப்பட்ட போதும், தற்போது எம்.பிக்கள் மரண அச்சத்துடன் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்களின் பின்னால் திட்டமிட்டு செயற்படும் சிலர் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.